×

நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய வழக்கு நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்டு கடிதம்: ஆயிரம்விளக்கு மகளிர் போலீசார் நடவடிக்கை

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நடிகை திரிஷா குறித்து அநாகரிகமான முறையில் பேசியிருந்தார். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் அளித்திருந்தனர். அதன்படி, சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசார், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர். திரிஷா பற்றி அவதூறாக பேசியது குறித்து, விளக்கம் அளிக்க கோரி நடிகர் மன்சூர் அலிகானுக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.

அதற்கு நடிகர் மன்சூர் அலிகான் முதலில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு நாள் அவசாகம் கேட்டு, வழக்கறிஞர் மூலம் போலீசாருக்கு கடிதம் அனுப்பினார். மேலும், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிமன்றம் மன்சூர் அலிகான் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. உடனே மன்சூர் அலிகான் திரிஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் முன்பு கடந்த 23ம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு மன்சூர் அலிகான், திரிஷாவே என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

அதன்படி நடிகை திரிஷாவும் மன்னித்து விட்டதாக விளக்கம் அளித்திருந்தார். பிறகு திடீரென மன்சூர் அலிகான் நடிகை திரிஷா மீது மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார். இந்நிலையில, நடிகர் மன்சூர் அலிகான் பேசியது குறித்து நடிகை திரிஷாவிடம் அவரது தரப்பு விளக்கத்தை கேட்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நடிகை திரிஷா தனது தரப்பு விளக்கத்தை நேரிலும் வந்து அளிக்கலாம் அல்லது எழுத்துப்பூர்வமாகவும் தங்கள் தரப்பு வாதத்தை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என திரிஷா கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

* நடவடிக்கை வேண்டாம்
மன்சூர் அலிகான் அவதூறு பேச்சு குறித்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் தங்கள் தரப்பு விளக்கம் கேட்டு நடிகை திரிஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அந்த கடித்தை தொடர்ந்து, திரிஷா போலீசாருக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘நடிகர் மன்சூர் அலிகான் தனது அவதூறு பேச்சுக்கு தன்னிடம் ‘மன்னிப்பு கேட்டதால்’ அவர் மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம்’. என்று தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு முடித்து வைப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய வழக்கு நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்டு கடிதம்: ஆயிரம்விளக்கு மகளிர் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mansour Ali Khan ,Trisha ,Chennai ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான்...